புதன், 28 செப்டம்பர், 2022

சந்தானத்துடன் முதல் முறையாக கைகோர்க்கும் பிரபல இசையமைப்பாளர்?

பல ஆண்டுகளாக வெற்றிகரமான நகைச்சுவை நடிகராக வலம்வந்து கொண்டிருந்த சந்தானம், கடந்த சில ஆண்டுகளாகக் கதாநாயகனாக மட்டும் நடித்துக் கொண்டிருக்கிறார்.



சந்தானம் இப்போது, பிரபல நிதியாளரும் விநியோகஸ்தருமான மதுரை அன்பு தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

2015 இல் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தை இயக்கிய என்.ஆனந்த், சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்கவிருக்கிறாராம்.

இயக்குநர் ஆனந்த்தின் தம்பி ஓம் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். நாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை இறுதிசெய்யும் வேலைகள் தற்போது நடந்துவருகின்றன.

இந்நிலையில் இந்தப்படத்துக்கு டி.இமான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.

சந்தானம் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு, அவரது படங்களுக்கு யுவன்ஷங்கர்ராஜா, சந்தோஷ் நாராயணன், சாம்.சி.எஸ் உட்பட பலர் இசையமைப்பாளர்களாகப் பணிபுரிந்துள்ளனர்.

இதுவரை டி.இமான், சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படத்துக்கு இசையமைக்கவில்லை. எனவே, இந்தப்படத்துக்கு அவரையே இசையமைப்பாளராக்க வேண்டும் என சந்தானம், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகிய அனைவருமே முடிவு செய்தனராம்.

அதன்படி டி.இமானை அணுகியிருக்கிறார்கள். அவரும் மகிழ்வுடன் ஒப்புக்கொண்டாராம்.

டி.இமானின் இசை மூலம் பட்டிதொட்டியெங்கும் சந்தானம் படத்தின் பாடல்கள் ஒலிக்கும் என்கிறார்கள்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக